சொற்களும் அதன் விளைவுகளும்
73 வயதான நான் கடந்த 50 ஆண்டுகளாக சமுதாயத்தின் பல்வேறு நோய்களை கண்டறிந்து, விடைகள் கண்டுபிடித்து அதை என்னால் முடிந்தவரை குணப்படுத்தி வருகின்றேன். 7-ம் அறிவு என்று பெயரிட்டு மனிதனுக்குள்ளேயே அவன் இன்னமும் அறிந்துக் கொள்ளாத ஒளிந்துக் கொண்டிருக்கும் திறன்களை அடையாளம் காட்டி அவன் மாறுவதற்கு மற்றும் முன்னேறுவதற்கு உதவி வருகின்றேன்.
சென்னையில் பிரபல ரவுடிகளாக கருதப்பட்ட அயோத்திக் குப்பம் வீரமணி, வெள்ளை ரவி, சேரா மற்றும் அவர்கள் இருவரின் மூப்பதுக்கும் மேற்பட்ட சீடர்கள் மேலும் பலரை 7-ம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்தி நல்வழிப்பாதைக்கு கொண்டு வந்தோம். காண்க இணைப்பு.
பழைய செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மிகவும் பணக்காரர்களாக வாழ்ந்தது எங்கள் குடும்பம். வியாபாரத்தில் என் பாட்டனாரும், என் தந்தையும் அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிட்டது. ஒரு குடிசைப் பகுதியில் குடியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
நாங்கள் நல்ல நிலையில் இருந்த பொழுது (அப்பொழுது நான் ஒரு பள்ளி மாணவன்) எங்கள் வீட்டிற்கு காமராஜர், பக்தவச்சலம், எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, அதற்கும் முன்னால் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் வந்துள்ளனர் (காண்க இணைப்பில் படங்கள்).
ஆனால் நாங்கள் ஏழையாகி கிரியப்பா சாலையில் குடிசைப்பகுதியில் குடியேறிய போது அங்கே சுற்றியிருந்தவர்கள் யார் என்றால், சமுதாயத்தில் ரவுடிகள் என்று பெயரெடுத்தவர்கள். கள்ளச்சாராயம் விற்பவர்கள். காண்க இணைப்பில் நாங்கள் பணக்காரராக இருந்த பொழுது வாழ்ந்த வாழ்க்கை. ஏழையாக இருந்த போது வாழ்ந்த வாழ்க்கை பற்றிய குறிப்புகள்.
எண்ணங்கள் மூலம் மிகவும் மோசமாக இருந்த குடிசைப் பகுதியை நட்சத்திர ஹோட்டல்கள் வரக்கூடிய அளவிற்கு அழகிய பகுதியாக மாற்ற முடிந்தது. எண்ணங்கள் உதவியால் என் கிரியப்பா சாலை வீட்டிற்கு வந்தவர்கள் யாரென்றால், அமைச்சர்கள், மேயர்கள், கமல், மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா, சுஹாசினி உட்பட எண்ணற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெல்லியிலிருந்து என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்த அமெரிக்க தூதர், முன்னாள் ஜனாதிபதி திரு.வி.வி.கிரி போன்ற எண்ணற்றோர். (காண்க இணைப்பு). எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிரச்சனையை எனக்கு பரிசாகியது. ஆம் எக்ஸ்னோரா இங்குதான் உதயமாகியது.
கிட்டத்தட்ட 30 பெரும் பின்னடைவுகள், 30 மாபெரும் வெற்றிகள். வேறு எவராக இருந்தாலும் ஏதாவது ஒரு மோசமான தருணத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நான் முழுமையாக நம்பியது,
தளராத மனம்
அயராத உழைப்பு
தணியாத ஆர்வம்
வற்றாத சிந்தனை
I know well that “Setback is a setup for a comeback”
இதையெல்லாம் கூறுவதற்கு காரணம் என்னைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக அல்ல. நான் கூறப் போகும் மிக மிக முக்கிய செய்தியினை தாங்கள் வெளியிட வேண்டும் என்பதற்காகவே.
இந்த பிரச்சனைகள் யாவும் என்னை சிந்திக்க வைத்தன. நான் யாருடைய உதவியை நாடினேன் என்றால் என் மூளையின் உதவியைதான். அதுவே என்னை ஒரு மனித மூளையின் ஆராய்ச்சியாளனாக மாற்றியது.
மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் எவ்வளவோ புதிர்களை புரிந்துக் கொண்டு சரியான விடைகளை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது என்றாலும், ஒரு உண்மையை ஒப்புக் கொள்வது என்றால், மனித மூளையின் ஆற்றலை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மனித மூளையின் ஒரு ஆராய்ச்சியாளன் கூட அல்ல, வெறும் ஒரு மாணவன் மட்டுமே என்று எனக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. மனித மூளை ஆராய்ச்சி பற்றிய எவரையும் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை இணைப்பில் பார்க்கவும்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது நம் சிந்தனைகள். நம் சிந்தனை என்பது நமக்குள்ளேயே நல் மாற்றங்களையோ அல்லது பாதிப்புகளையோ உருவாக்குகின்றன. சிந்திப்பது என்பது ஒரு பேச்சாளரின் உத்வேகப்படுத்தும் சொற்பொழிவைக் கேட்பதற்கு சமம். சிந்தனையின் சொற்பொழிவு ஒவ்வொரு மனதிற்குள்ளேயேயும் எப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பேச்சாளரின் உரை ஒரு மனிதனை நல்ல காரியமோ அல்லது தீய காரியமோ செய்ய தூண்டுதலாக இருப்பது போன்றுதான் நமது சிந்தனையின் சொற்பொழிவும்கூட. சிந்தனை எப்படி சொற்பொழிவு என்று கேட்கலாம். சிந்திக்கும் பொழுது அந்த ஒலியற்ற சொற்பொழிவினை கேட்பது நமது மூளை குறிப்பாக ஆழ்மனது மற்றும் பல்லாயிரக் கோடிக்கணக்கான உயிரணுக்கள் (cells). நம் சிந்தனைகள் அனைத்தும் ஆழ்மனதில் பதிவாகி கொண்டே இருக்கின்றன.
ஆழ்மனதின் கொள்ளளவு (Capacity) எவ்வளவு என்றால், அது பிரபஞ்சத்தின் அளவு. பிரபஞ்சத்திற்கு அளவே கிடையாது. ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அதேபோன்றுதான் ஆழ்மனதின் கொள்ளளவு.
மறதியால் அவதிக்குள்ளாகுபவர்கள் ஏராளமானோர். ஒரு விஷயத்தை மறந்து விட்டதாக மூளையை கசக்கி பிழிவார். சற்று நேரம் அமைதியாக இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது விஷயங்களில் கவனம் செலுத்தும் போதோ அந்த மறந்த விஷயம் தானாகவே நினைவுக்கு வரும். இது ஆழ்மனதின் அற்புதம்.
அனைத்து ஆழ்மனது பதிவுகளுமே விதைகள் போன்றவை. சக்தி வாய்ந்த விதைகளும் உண்டு. சக்தியற்ற விதைகளும் உண்டு. சக்தி உடைய விதைகள் மனிதனை ஒரு நல்ல நடவடிக்கையோ அல்லது கெட்ட நடவடிக்கையோ எடுக்க தூண்டும். அப்படி சக்தி உடைய விதைகள் அவன் ஆழ்மனதில் விழும் போது, அவன் தூங்கும் போதும், அந்த விதைகள் தூங்குவது இல்லை. வேலை செய்துக் கொண்டே இருக்கும். அவை வளர்ந்துக் கொண்டே இருக்கும். ஒரு ஆலமரம் போன்று வளரும்.
நல்ல சிந்தனைகள் மட்டுமே உருவாவது எப்படி? என்பதற்கும், விடைகள் ஒன்றினை உருவாக்கி உள்ளோம். அதன் பெயர் “மனித ஜன்னல்கள்” (Human Windows). ஒரு குழந்தையை நன்றாக, ஒழுக்கமான, அறிவான மனிதனாக வளர அந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த மனித ஜன்னல்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். அது தனியாக விளக்கப்பட்டுள்ளது.
ஆழ்மனது மட்டும் இன்றி, நமது உடலில் உள்ள பல்லாயிரக் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் மனிதன் சிந்திக்கும் பொழுது அந்த சிந்தனை என்ற சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்த உயிரணுக்கள் உருவாவதும், மறைவதும் ஒவ்வொரு நொடியும் நடந்துக் கொண்டு இருக்கின்றது. அதனால் இதை நாம் அற்பமாக கருதலாம். ஆனால் இந்த உயிரணுக்கள் இயற்கையின் படைப்பிலேயே மிக, மிக அதிசயமான ஒன்று. குளோனிங் மூலம் கண்ணுக்குத் தெரியாத ஒரே ஒரு ஸ்டெம் செல் உயிரணுவை (Stem Cell) கொண்டு இன்னொரு முழுமையான உயிரை உருவாக்க முடியும். இதை விஞ்ஞானத்தின் மூலம் அதாவது குளோனிங் மூலம் விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு முழுமையான விலங்குகளையே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள்.
உதாரணத்திற்கு ஒரு மரக்கிளையை எடுத்துக் கொள்ளுங்கள். அது உடையலாம். அதன் இலைகள் உதிரலாம். ஆனால் அவை மீண்டும் துளிர்த்து வளருகின்றன. அதற்கு காரணம் என்னவென்றால் செடிகளில் இருக்கும் செல்கள் அந்த ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றன.
A Stem Cell is Like The Stem Of A Plant:
Here’s an easy way to understand stem cells. Imagine the stem of a plant that grows, branching out into leaves, flowers and fruits. On windy days, the branches can break. In some seasons the leaves dry up and fall. Despite this wear and tear, the stem finds a way to grow back to its original Self.
அதே போன்றுதான் மனித உடலில் உள்ள அஸ்திவாரமே ஸ்டெம் உயிரணுக்கள். நம் உடலின் ஒவ்வொரு பிரிவிலும் அதாவது இரத்தம், எலும்புகள், தோல், தசைகள் அவை அனைத்துமே “ஸ்டெம் செல்” என்று அழைக்கப்படும் மாஸ்டர் செல்கள் மூலம் உருவாகின்றன.(Similarly, stem cells are the very foundation of the human body. Every part of our body including blood, bones, skin and muscles are formed from master cells known as stem cells).
இரத்த செல் வேறு, எலும்பு செல் வேறு, தசை செல் வேறு, மூளை செல் வேறு. ஆனால் இவை பழுதடைந்தால் அங்கு ஸ்டெம் செல்களை மருத்துவ ரீதியாக செலுத்தி அதை புதுப்பிக்கலாம். நோய்க்கு உள்ளாக்கப்பட்டவரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone Marrow) ஒரு உயிரணுவை எடுத்து அவர் உடலிலே மருத்துவ ரீதியாக செலுத்திவிடலாம். அதன் பிறகு நடப்பவை அனைத்துமே அற்புதங்கள்தான்.
இந்த ஸ்டெம் செல்களுடைய அற்புத குணாதிசயங்கள்.(These stem cells have three important qualities)
- அவை மேலே குறிப்பிட்டுள்ள வெவ்வேறு பிரிவுகளில் அந்த பிரிவுகளுக்கு ஏற்ற செல்களாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன. (Have the capacity to turn into any type of cell in the body such as muscle cell, bone cell, blood cell, tissues and brain cell).
- இன்னொரு அதிசயம் என்னவென்றால், இந்த செல்கள் தங்களுக்குத் தாங்களே விருத்தி செய்துக் கொள்ளுகின்றன. (Can replicate or copy themselves limitlessly).
- மற்றொரு அதிசயம் விரைவாக உடலில் பழுதடைந்த பகுதியை இந்த செல்கள்தான் பழுது பார்க்கின்றன.(Are responsible for repair and regeneration functions in the body).
உதாரணமாக ஒரு மனிதனுக்கு குணப்படுத்த முடியாத அளவிற்கு நோய் உண்டாகும் பொழுது ஸ்டெம் செல்களை மருத்துவ ரீதியாக உள்ளே செலுத்தி குணப்படுத்தலாம். எலும்பு மஜ்ஜை (Bone Marrow), பற்கள், புற இரத்தம், தொப்புள் கொடி ஆகியவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து பயன்படுத்தி குணப்படுத்தலாம். (Owing to these qualities, stem cells are taking center stage in medicine today. Research has proven that stem cells can be used in the treatment of many medical conditions. In the past 50 years, over a million people world over have benefitted from the power of stem cells and are now living a renewed life. The human body has different sources of stem cells such as the bone marrow, tooth, peripheral blood and the umbilical cord).
இன்று ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் தொப்புள் கொடியை பாதுகாத்து குளிர்சாதனப் பெட்டிகளில் (Bank Safety Locker போன்று) வைக்கின்றார்கள். அந்த தாயுக்கோ அல்லது குழந்தைக்கோ குறிப்பிட்ட நோய்கள் வரும் போது, பாதுகாத்து வைக்கப்பட்ட தொப்புள் கொடியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஒரே ஒரு உயிரணுவை எடுத்து பயன்படுத்தினால் போதும், அந்த நோய் குணமாகிவிடும். (The umbilical cord that forms the bond between the mother and the baby inside the womb is the richest source of lifesaving stem cells. There is every reason to preserve the umbilical cord blood and the tissue at the time of birth).
இந்த ஆராய்ச்சியில் இன்று “LifeCell” என்ற நிறுவனம் முன்னனியில் உள்ளது. அந்த ஆராய்ச்சி குழுவில் நான் ஒரு ஆலோசகராக (Social Scientist) உள்ளேன்.
பல பேருக்கு சர்க்கரை வியாதி மற்றும் விபத்துக்களால் கால்கள் பழுது அடைந்துவிடும். கால்கள் செப்டிக் ஆகிவிடும். பிறகு அந்த காலை வெட்டி அகற்றினால்தான் அவர் உயிர் பிழைப்பார் என்ற நிலை வரும் பொழுது அந்த காலை அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுத்துவிடுவார்கள். அதனால் அவர் உடல் ஊனமுற்றவராகி விடுவார்.
ஆனால்LifeCell-ல் நடக்கும் அதிசயம் என்னவென்றால், பழுதுபட்ட காலுக்கு சொந்தக்காரருடைய எலும்பு மஜ்ஜை (Bone Marrow) உயிரணுவை எடுத்து, அந்த பழுதுபட்ட காலில் செலுத்துகிறார்கள். உள்ளே செலுத்தப்பட்ட உயிரணு உள்ளே சென்று உடனடியாக வேலையை ஆரம்பிக்கிறது. அந்த உயிரணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகுகிறது. பழுதுபட்ட உயிரணுக்களின் இடத்தை அது எடுத்துக் கொள்கிறது. பழுதுபட்ட உயிரணுக்கள் வேகமாக மறையத் தொடங்குகின்றன. பிறகு என்ன?
இதுவரை LifeCell மருத்துவ சேவையால் இராமசந்திரா மருத்துவமனையின் E1 வார்டில் வெட்டப்பட வேண்டிய நிலையிலிருந்த பழுதுபட்ட காலோடு சேர்க்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் பூரணம் குணம் பெற்று மருத்துவமனையிலிருந்து தங்கள் கால்களால் நடந்து சென்றார்கள்.
நம்முடைய ஆறறிவில், தொடு உணர்வு (Touch Sense) மிகவும் முக்கியமானது. பார்வை (Sight) திறன் கொண்ட கண்கள் இரண்டே இரண்டுதான். கேட்கும் சக்தி உடைய காதுகள் (Hearing) இரண்டே இரண்டுதான். ஆனால் தொடு உணர்வு (Touch Sense) உயிரணுக்களோ பல்லாயிரக்கோடி.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் எப்படி உணருகின்றன என்பதற்கு உதாரணங்கள் “புல்லரிப்பு” என்பது ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வு. அதே போன்று “புளங்காகிதம்”. எல்லாவற்றுக்கும் மேலாக “மெய்சிலிர்த்தல்” (Goosebumps).
அதே நேரத்தில் ஒரு விபத்தை பார்க்கும் போது “அதிர்ச்சி” உணர்வு, உயிரணுக்களால் உடனே உணரப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து வரும் போது “பய உணர்வு” (உடல் நடுங்குவது – Shivers & Gooseflesh- a pimply state of the skin with the hairs erect, produced by cold or fright), எவரையாவது இழக்கும் போது உண்டாகும் “சோக உணர்வு”. மற்றவர்களிடம் பேசுவதை தடுக்கும் “கூச்ச உணர்வு” (உடல் சுருங்கும்), பரபரப்பு (Heebie-jeebies – a state of nervous fear or anxiety) மற்றும் “எரிச்சல்”, “அருவெறுப்பு” இப்படி அனைத்து உணர்வுகளும் உயிரணுக்களால் உணரப்படுகின்றன, பதிவு செய்யப்படுகின்றன. அந்த தாக்கம் மனிதனுக்கு நல்ல அல்லது கெட்ட பாதிப்பினை உண்டாக்குகின்றன.
“நான் அறிவாளி”, “நான் சாதிக்கப் பிறந்தவன்”, “என்னால் முடியும்” இதுபோன்ற சிந்தனைகள் உருவாகும் மனதின் சொந்தக்காரர் நிச்சயம் வெற்றி அடைவார். காரணம் என்னவென்றால் அந்த சிந்தனை என்பது ஒரு சொற்பொழிவு. அந்த சொற்பொழிவை கூர்ந்து கவனித்து கேட்பது ஆழ்மனதும், உயிரணுக்களும் மட்டுமே.
“நான் தண்டம்”. “எனக்கு பேசத் தெரியாது”. “எனக்கு கூச்ச சுபாவம்”. “நான் தொட்டால் எதுவும் துலங்காது” என்று தங்கள் மனதில் தங்களுக்குத் தாங்களே எதிர்மறை சான்றிதழ்களை (Negative Certification) வழங்கிக் கொள்பவர்கள் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்திப்பார்கள். இது ஒரு மாபெரும் ஆராய்ச்சி. இதுபற்றி இங்கு ஒரு தகவல் மட்டுமே தந்துள்ளேன்.
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. அதிர்வுகளை (Vibes) உண்டாக்கும் சக்தி வாய்ந்த வார்த்தைகள் உயிரணுக்குள் சென்று தன் வேலையை ஆரம்பிக்கும். இதற்காகவே நாங்கள் “முத்திரை, மனம், மந்திரம்” (Mudhra, Mind, Mantras) என்ற ஒரு நுட்பத்தை “7-ம் அறிவு” வகுப்பில் 1999-ஆம் ஆண்டிலிருந்து கற்றுத் தருகின்றோம். இதனால் பங்கேற்றவர்கள் உடைய வாழ்க்கை எப்படி அடியோடு மாறியது என்பதை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 7-ம் அறிவு கையேட்டில் பார்க்கவும். இதனால் பலன் அடைந்தவர்கள் உயர் அரசு அதிகாரிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள், தனியார் துறை பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், முக்கியமாக ரவுடி என்ற பெயரெடுத்தவர்கள்.
“நான் சக்தி உடையவன்”, “தன்னம்பிக்கை உடையவன்”, “நான் சாதனையாளன்”, “என்னால் முடியும்”, “வெற்றி நிச்சயம்” போன்ற சக்தி வாய்ந்த வார்த்தைகளை முத்திரைகளுடன் சேர்த்து பயன்படுத்தி உணர்வுப்பூர்வமாக சொல்லும் பொழுது இந்த வார்த்தைகள் ஆழ்மனதிலும் உயிரணுக்களிலும் பதிவாகின்றன. பதிவாகி முன்னேறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. நினைவூட்டுகின்றன.
நாம் மனவளக்கலை மன்றத்தினர் யாரை சந்தித்தாலும் “வாழ்க வளமுடன்” என்று கூறுவார்கள். சொல்லுபவர் முகத்திலும், கேட்பவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நாம் பார்க்கலாம். பிரம்மகுமாரி சகோதரிகள் “ஓம் சாந்தி” என்று கூறுவார்கள். சாந்தத்தை அவர்கள் முகம் முழுமையாக பிரதிபலிக்கும். சாந்தத்தை ஒரு நொடியில் உணர்ந்து ஒரு நல் பாதிப்பிற்கு நாம் உள்ளாகிறோம்.
“வாழ்க வளமுடன்” என்று நீங்கள் ஒருவருடன் கூறும் பொழுது அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் கூறும் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்பது உங்கள் ஆழ்மனதும் உங்கள் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களும்தான். எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் இந்த இரு வார்த்தைகளை பயன்படுத்துகின்றாரோ அந்த அளவிற்கு கூறுபவரின் வாழ்க்கையில் வளம் சேரும். மகிழ்ச்சி பொங்கும்.
அதே போன்று யாரையாவது பார்த்து “நாசமாக போ” என்று சபித்தால், அந்த சாபம் எதிராளிக்கு சேருவதற்கு முன்னால் சொல்பவரின் காதுகளையே சென்று அடைகின்றது. அவர் உடல் செல்கள் உணருகின்றன. நிச்சயமாக இந்த வார்த்தைகள் அவருடைய உடலில் இரசாயண மாற்றங்களை உண்டாக்கும் (Chemical Reaction). அவருடைய உடல் கூறு பாதிக்கப்படும். மனம் வலிமை இழந்துவிடும். அனைத்து மதங்களும் இதைப் பற்றி அழுத்தமாக கூறியுள்ளன. “நம் எண்ணங்கள் போன்றுதான் நம் வாழ்க்கை அமையும்” என்று.
இனி எந்த கூட்டத்திலும் பேசுவதற்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் குரலுக்கு வளம் கூட்டி, சபையோரைப் பார்த்து அழுத்தத்துடன், கனிவுடன் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட்டு இப்படி கூறிப் பார்க்கலாம். “வாழ்க வளமுடன்”….. “நலமுடன்”….. “மகிழ்ச்சியுடன்”….. “செழிப்புடன்”….. “சிறப்புடன்”….. “வாழிய வாழியவே” என்று கூறுவது நல்லது. அவர் கூறி முடிப்பதற்குள் கைதட்டல் காதை பிளக்கும். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட சக்தி வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் உற்சாகமான மனநிலைக்கு எடுத்து செல்ல முடியும். பேச்சாளரின் உரை வெற்றிப் பெறும்.
மனோதத்துவ நிபுணர்கள் பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு நிச்சயம் ஒரு ஆலோசனை வழங்குவார்கள். “காலையில் தூக்கம் கலையும் பொழுது கண்களை திறக்காமலேயே நீங்கள் மனதிற்குள்ளேயே சக்தி வாய்ந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை ஐந்து அல்லது பத்து முறை கூறிக் கொள்ள வேண்டும்” (During Alpha State of Mind) என்று கூறுவார்கள். இதை சுய பரிந்துரை (Auto Suggestion) என்பார்கள். இது படுக்கை உறுதிமொழி (Bed Affirmation) என்று வகைப்படுத்தி உள்ளோம்.
சர்க்கரை வியாதி உள்ள ஒருவர் தனக்குத்தானே “எனக்கு சர்க்கரை வியாதி இல்லை” என்று கூற கூடாது. அது ஒரு எதிர்மறைக் கூற்று. ஆழ்மனதும், உயிரணுக்களும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தவறாக புரிந்துக் கொள்ளும். சர்க்கரை வியாதியை அவர் நாடுகிறார் அல்லது விரும்புகிறார் என்று தவறாக புரிந்துக் கொண்டு சர்க்கரை வியாதியினை அதிகப்படுத்தும். மாறாக “என்னுடைய கணையம் தேவையான அளவு இன்சுலினை தருகின்றது” என்றே கூற வேண்டும். சுய பரிந்துரை செய்ய வேண்டும் (Auto Suggestion).
“நான் கடன் தொல்லையிலிருந்து விடுபடுகிறேன்” என்று சுய பரிந்துரை செய்யக்கூடாது. கடன் தொல்லை மேலும் அதிகமாகும். “நான் செல்வ செழிப்போடு இருக்கிறேன்” என்று சுய பரிந்துரை செய்து கொள்ள வேண்டும்.
இதுவரை ஆழ்மனது மற்றும் உடல் உயிரணுக்கள் நாம் சிந்திப்பவை, பார்ப்பவை, கேட்பவை, ருசிப்பவை, தொடுபவை அனைத்தையுமே பதிவு செய்து கொள்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். NLP என்ற நுணுக்கம் 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் எங்கும் NLP பயிற்சி முலம் சொல்லி தரப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஒரு மனிதன் தலைமை குணாதிசயங்களைப் பெறலாம். தொடர்ந்து வெற்றி பெறலாம். இந்த நுணுக்கத்தில் அடிப்படையான உண்மையாக கருதப்படுவது எதுவென்றால், ஒரு மனிதனுக்கு தகவல்கள் அவன் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோலில் உள்ள உயிரணுக்கள் வழியாக அவன் மூளைக்குச் சென்றடைகின்றன என்பதே.
ஜப்பான் நாட்டைச் சார்ந்த “மசாரோ எமோட்டோ” ஒரு பெரிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கீழ்க்கண்ட தன் கண்டுபிடிப்புகளை பதிவு செய்துள்ளார்.
மனிதன் 70% தண்ணீர். அவன் சிந்தனை மற்றும் சொற்களுக்கு ஏற்றால் போல் உடலில் உள்ள நீர், நன்மை அல்லது தீமை பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதே அவர் கண்டுபிடிப்பு.
அருவிக்கு நேராக சென்று நல்ல தண்ணீரை பிடித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய செய்து அந்த துகள்களை கேமிரா பொருத்தப்பட்ட மைக்ரோ ஸ்கோப் மூலம் “மசாரோ எமோட்டோ” படம் எடுத்தார். ஒவ்வொரு நீர் துளியும் அழகான, விதவிதமான மின்னும் கிரிஸ்டல்களாக மாறிய அதிசயத்தைக் கண்டார். அதே போன்று அழுக்குத் தண்ணீரை வைத்து பரிசோதனை செய்த போது அவை கிரிஸ்டல்களாக மாறவில்லை.
தண்ணீரே “நன்றி” என்று கூறி குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைத்தார். கிரிஸ்டல்கள் உருவாகின. “தண்ணீரே நீ மோசம்” என்று கூறி பரிசோதனை செய்த போது கிரிஸ்டல்கள் உருவாகவில்லை.
இவருடைய கண்டுபிடிப்புக்கு பேராதரவும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. 2014-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். ஆனாலும் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்துக்கள் தண்ணீரை பஞ்பூதங்களில் ஒன்றாக கருதுவதால் இந்த ஆராய்ச்சி இந்துக்களிடையே நல் வரவேற்பினை பெற்றது.
அதனால்தான் நம் மூதாதையர்கள் மழை பெய்து அது நமக்கு இடையூறு விளைவித்தால் “மழையை நிந்திக்கக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்கள். அப்படி செய்தால் மழை பெய்வது நின்றுவிடும் அவர்கள் ஐதீகம்.
மசோரா எமோட்டாவின் ஆராய்ச்சியில் உண்மை இருப்பதாக நாம் ஏற்றுக் கொண்டால், நம் சிந்தனையிலும் சொற்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பது நம் மூளை, ஆழ்மனது, உடல் உயிரணுக்கள் மட்டும் அல்ல, நம்முடைய உடலில் உள்ள தண்ணீரும்கூடதான் (Humans are made up of 70% of water).
இந்த வார்த்தைகளுக்கு வலிமை இருக்கின்றதா? என்று இன்னமும் சந்தேகப்படுபவர்களுக்கு இதோ சில நிருபிக்கப்பட்ட உதாரணங்கள்.
1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. அதற்கு பிறகு இரண்டு கட்சிகளால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு மனோதத்துவ ரீதியான காரணம் அந்த கட்சிகளின் பெயர்களில் “முன்னேற்றம்” என்ற வார்த்தை இருப்பதே (திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்). மற்ற கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியவில்லை. “முன்னேற்றம்” என்ற வார்த்தைக்கு அவ்வளவு வலிமை உண்டு. இந்த இரண்டு கட்சிகளுக்கும் நதி மூலம், ரிஷி மூலமாக இருந்தது “திராவிடர் கழகம்”. “முன்னேற்றம்” என்ற வார்த்தை பெயரில் இல்லாத காரணத்தால் என்னவோ திராவிட கட்சிக்கு ஆட்சிக்கு வந்து மாற்றங்கள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்திலிருந்து இல்லாமல் போய்விட்டது.
தமிழ்நாட்டில் சினிமா துறை என்றாலே இருவர்தான் இரண்டு தூண்கள் போன்றவர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் சிவாஜி. இரண்டு பேருமே சரித்திர சாதனையாளர்கள். இருவரும் முதல்வராக வர வேண்டும் என்று கனவு கண்டவர்கள்.
மலையாள மொழியினை தாய்மொழியாக கொண்ட எம்.ஜி.ஆர் அவர்களால் முதல்வராக முடிந்தது. பேச முடியாத நிலையிலும் முதல்வராக பணியாற்றினார். இந்திய சரித்திரத்தில் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு முதல்வராக திகழ்ந்தார்.
“எங்கள் தாய்மொழி தமிழ் அற்புத மொழி” என்ற எண்ணம் அனைத்து தமிழர்களுக்கும் உண்டானது நடிகர் சிவாஜி அவர்கள் தமிழ்மொழியை உச்சரித்த போதுதான், வசனம் பேசிய போதுதான் என்றாலும் அவரால் முதல்வராக முடியவில்லை.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆனதுக்கும், சிவாஜி அவர்கள் முதல்வர் ஆகாமல் போனதுக்கும் பல காரணங்கள் உண்டு. அடிப்படை காரணமாக இருந்தது அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அதில் இடம் பெற்ற காட்சிகள், முக்கியமாக படத்தின் பாடல்கள். இந்த பாடல்களை பாடியது திரு.ஜிவிஷி அவர்களாக இருக்கலாம். இந்த பாடலில் மகிழ்ச்சி அல்லது சோக உணர்வோடு ஒன்றிப் போய் நடித்தவர்கள் யார் என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்கள்.
இதோ இருவர் நடித்த பாடல்களின் ஒரு சாம்பிள் பட்டியல்.
இதுபோன்று பல உள்ளன. எம்.ஜி.ஆர் அவர்களின் “நான் ஆணையிட்டால்” என்ற பாடல்களின் வரிக்கு சக்தி (Energy) அதிகமாக இருக்கும். அந்த பாடலை கேட்டாலோ, பாட்டுக் காட்சியை பார்த்தாலோ எவருக்கும் தன்னம்பிக்கை தலைதூக்கும். அதுவே எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வராக்கி ஆட்சி பிடிக்க வைத்தது. அனைவருக்கும் ஆணையிடும் முதல்வர் பதவியில் கொண்டு சேர்த்தது. “உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடல் அவருக்கு “தமிழகம் பிறந்தது எனக்காக” என்று மாற்றியது.
இதில் திரு.சிவாஜி அவர்கள் நான் குறை கூறவில்லை. திரு.சிவாஜி அவர்கள் நடிப்பின் பல்கலைக்கழகம், நடிப்புலகத்தின் சக்கரவர்த்தி. உணர்ச்சி ததும்பும் பாத்திரங்களை அவருக்கு கொடுத்தார்கள். அந்த பாத்திரமாகவே அவர் உருமாறினார். உணர்ச்சி பிழம்பாகவே அவர் மாறினார். சிவாஜியும் மகிழ்ச்சியான பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த பாடல்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சோகமான காட்சிகளில் நடிக்கும் பொழுது அவர் நடிப்பில் ஒன்றி அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார். இது மூடநம்பிக்கையை சார்ந்தது அல்ல, விஞ்ஞான பூர்வமானது. இதை ஆங்கிலத்தில் செல் ஜுவனேஷன் (Cell-Juvenation) என்போம்.
குடும்பத்தினர், வங்கி ஊழியர்கள், பல நூற்றுக்கணக்கான குடியிருப்போர் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் என்று பெயரெடுத்தவர்கள், கிட்டத்தட்ட ஆறாயிரம் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோருடைய ஆழ்மனதையும், உடல் உயிரணுக்களையும் புரோகிராம் செய்து வெற்றி கண்ட பிறகு பிறகு இதற்கு அடுத்ததது என்ன என்ற கேள்வி என் உள்ளத்தில் வந்தது.
செடிகளும் செல்களால் உருவாக்கப்பட்டவைதானே. செடிகளையும் ஏன் புரோகிராம் செய்யக்கூடாது? என்ற வினா எனக்குள் எழுந்தது.
இதோ செடிகளின் செல்கள் மற்றும் மனிதனின் செல்கள் ஆகியவற்றின் படங்கள்
செடிகளுடைய உயிரணுக்களை புரோகிராம் செய்ய முடியுமா? என்று யோசித்தேன். அந்த நேரம் பார்த்து ஒருவர் இரசாயணத்தாலும், பிளாஸ்டிக்காலும் அதுவும் சீனாவில் செய்யப்பட்ட செயற்கை செடி கொத்து ஒன்றினைக் கொடுத்தார். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அதை வைத்துக் கொள்ளவும் முடியாது, தூக்கி எறியவும் முடியாது. “என்ன செய்வது?” என்று யோசித்தேன்.
முடிவெடுத்தேன், வீட்டிற்குள்ளேயே நிழலில் நிஜ செடி வளர்க்க முடியும், அவை வளரும் என்று உலகத்திற்கு காட்ட விரும்பினேன். அவர்கள் இப்படி செயற்கை செடிகளை வாங்கக்கூட என்று அறிவுறுத்தவும்தான். என்னுடைய அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளேயே (Flat) இன்று 1700 செடிகள் வளருகின்றன. வீடு காடாகிவிட்டது. நீங்கள் அவசியம் வர வேண்டும். இந்த அதிசயத்தைப் பார்க்க வேண்டும்.
நான் இருப்பது 12-வது மாடியில். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குள் பால்கனி வழியாக உள்ளே நுழைந்தது எது என்றால், இரண்டு குரங்குகள், இரண்டு ஆந்தைகள், இரண்டு வெளவால்கள், எண்ணற்ற புறாக்கள், தேனீக்கள். மனிதன் மனது வைத்தால் இயற்கையை திரும்ப கொண்டு வர முடியும். இயற்கையோடு ஒன்றிப்போய்விட முடியும் என்று மகிழ்வடைந்த நேரத்தில் சற்றே பயந்த என் துணைவியார் வீட்டைச் சுற்றி வலைகள் போட்டு பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளார். 1700 செடிகளைப் பார்க்க நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அயல்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் வந்த வண்ணம் உள்ளார்கள்.
அரிஹந்த் கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் (மொத்தம் 300 குடும்பங்கள்) ஆச்சரியப்படுகின்றார்கள். “எங்கள் வீட்டில் ஒரு செடிகூட இப்படி வளரவில்லையே” என்று. அப்படி என்னுடைய குடியிருப்பில் செடிகள் வளருவதற்குக் காரணம் என்னுடைய உயிரணுக்கள் மூலம் செடிகளின் உயிரணுக்களுக்கு என்னுடைய உவகை சென்றுக் கொண்டே இருக்கின்றது. பதிவாகிக் கொண்டே இருக்கின்றது. ஆம், நாம் செடிகளுடன் உரையாடக்கூட வேண்டியதில்லை. நாம் தாவரங்களுடன் பற்றும் பாசமும் கொண்டிருந்தால் போதும். தாவரங்கள் புரிந்துக் கொள்ளும்.
அதற்கு முன்னால் ஒரு நிகழ்வு. நான் முன்பிருந்த கிரியப்பா சாலை வீட்டிற்கு முன்னால் அரசமரம் ஒன்று வைக்கலாம் என்று யோசித்தேன். வைக்க இடம் இல்லை. ஒரு நூதன யோசனை தோன்றியது. நுழைவாயில் இரும்பு கதவு (Gate) தூணின் மேல் ஒரு தொட்டி கட்டி அரச மரத்தை நட்டேன் (1987-ம் ஆண்டு). பலரும் வீட்டிற்கு அருகே மரம் வைக்கமாட்டார்கள். ஏனென்றால் மரத்தின் வேர்கள் வீட்டின் சுவர்களை பிளந்துவிடும் என்ற அச்சம் காரணமாக. தூண் மீதே மரத்தை நட்ட நான் அதிகாலையில் எழுந்தவுடன் அந்த மரத்துடன் உரை நிகழ்த்துவேன். “அன்பிற்குரிய அரச மரமே நீ நிற்பது இந்த தூண் மீதுதான். இந்த தூண் உனக்கு ஆதரவாக இருக்கின்றது. நீ செழித்து வளர இந்த தூணின் ஸ்தர தன்மை மிக முக்கியம். முக்கியமாக உன்னுடைய ஆதரவு, நீ நிற்கும் சுவருக்கு மிக மிக அவசியம்”. யாரும் நம்பமாட்டார்கள். இந்த மதில் சுவரை உடைக்க வேண்டிய வேர்கள் அதற்கு முழு பாதுகாப்பு தந்தது. காண்க படம்.